தளிர் விட்டு வளரும் பருவத்தில்
தந்தையின் அரவணைப்பில் இருந்தேன்
பெண்களுக்கே உரிய குணத்தை
தாய்க் கற்றுத்தர
இவ்வுலகில் வாழ தேவையான
கல்வி அறிவை
தந்தைக் கற்றுத்தர
அவர்கள் நிழலையே நம்பிவாழும்
ஒரு கன்றாய் அவர்களை
சுற்றி சுற்றி வந்தேன்
எங்கு சென்றாலும் அவர்களுடைய
பாதுகாப்போடு - ஒரு
சுதந்திரப் பறவையைப் போல
இவ்வுலகையே சுற்றி வந்தேன்
திடீரென்று ஓர் நாள்
மேகமூட்டம் போல்
யார்யாரோ வந்து சூழ்ந்து கொண்டனர்
அவர்களில் ஒருவர் - இவன்தான்
உன்துணை என்றுக் கூற
நான் மிகவும் குழப்பத்தோடு
இவன் யார்?
இவன் குணத்தால்
கஸ்தூரி மானா? இல்லை காட்டெருமையா?
என்று கூட தெரியாமல்
என் கேள்விக்கு பதில் கூட
கிடைக்காத தருணத்தில்
என் பெற்றோரால் முடிக்க வேண்டிய
அனைத்து சம்பிரதாய சடங்குகளும்
நிறைவேற்றப்பட்டது.
எவ்வித பதட்டமும்மின்றி - என்
தாய் என்னருகில் வந்து
இவன் தான் உன்துணை
இவன் நிழலில் தான் - நீ
வாழவேண்டும் - என்று
என்னை வேரோடு பிடிங்கி
அந்த மண் பக்குவப்படுத்தப்பட்ட மண்ணா?
நான் வாழ ஏற்ற மண்ணா?
என்று கூட பார்க்காமல்
என்னை அவர்களோடு
அனுப்பிவைத்தனர்
நானோ,
கடந்த கால வாழ்க்கையின்
ஏக்கத்தோடும்
எதிர்கால வாழ்க்கையின்
குழப்பத்தோடும் - ஒரு
புது உலகை நோக்கி
அடி எடுத்து வைத்தேன்
எப்படியென்றால்,
தாய் கற்றுத் தந்த
"பெண்ணிற்கே உரிய குண்த்தோடும்"
தந்தை கற்றுத் தந்த
"எத்தைய இக்கட்டான சூழ்நிலையும்
எதிர்த்து போராடும் துணிச்சலோடும்"
ஒரு புது உலகை நோக்கி
அடியெடுத்து வைத்தேன்.